Thursday, March 31, 2016

நண்பர்களே
             சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற  சேனலில் ஒரு சர்ச்சை!
                சிறந்த ஒரு குரலைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் ஏற்பட்டிருக்கிற சர்ச்சை.
        அந்த  சானல் ஏற்கனவே  தன்னுடைய சட்ட திட்டங்களை நேயர்களுக்குத்  தெரிவிக்கவில்லையாம். நேயர்களுக்கு ஒரே  கவலை.ரொம்ப  அவசியம்.
             எது எப்படியிருந்தாலும் வெற்றி பெற்ற போட்டியாளர் படிப்படியாகத்  தன் திறமையை நிரூபித்துத் தான்  வெற்றி  பெற்றதாக  நான் கருதுகிறேன்.
                     அவர்களது சட்ட திட்டங்களைக் குறித்து இவ்வளவு கவலைப்
படுகிற மக்களே!
 உங்கள் தலையில் வண்டி வண்டியாய் மிளகாய் அரைக்கிற நம் அரசியல்வாதிகளைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்டிருக்கிறீர் களா?
                  தேர்தல் அறிக்கையைத்    தேர்தல் முடிந்தவுடன் தூக்கிக் குப்பையில் போடுகிற அரசியல்வாதிகள்!
                   உங்கள் தொகுதியில் கொடுத்த வாக்கை  நிறைவேற்றாத எம்.எல்.ஏ!  
      எக்கச் சக்கமாக பணம் வாங்குகிற தனியார் பள்ளி.கல்லூரி நிர்வாகங்கள்
 இவர்களை யாராவது  கேள்வி கேட்க முடியும்?கேட்டு விட்டு நிம்மதியாக இருக்க முடியும்?                  
 ஒரு பொழுது போக்கு நிகழ்வு!
வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள்!
போட்டியாளர்களை மெருகேற்றித் துலக்கிப் பளபளக்க வைக்கிறார்கள்.
         சின்னச்  சின்னக் குழந்தைகளைஎல்லாம்   சின்னவீடா  வரட்டுமா என்று பாட வைத்து இன்னும் கொஞ்சம் பீலிங் பத்தலை என்று சொல்லும் போது கஷ்டமாகதான் இருக்கிறது.அது வேறு  இஷ்யு.
              திறமையைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒட்டு தேவையா என்பது குறித்தும் எனக்குக் கேள்விகள் உண்டு.
                              எனினும் இப்போது என்     கருத்து.வெற்றியாளர்தகுதியானவரே !என் ஒட்டு அந்த இளைஞனு க்கே ! 
    

Tuesday, March 29, 2016


நண்பர்களே!
        பல நாள்களுக்குப் பின் உங்களை சந்திக்கிறேன்.இதற்குள்ளாக வாழ்க்கையில்     எத்தனையோ  விஷயங்கள்  கடந்து போய் விட்டன .
                      இந்த மாதத் துவக்கத்தில் என்னோடு தொடர்புடைய ஒன்று என் கைவிட்டுப்   போனது.
   என் வீடு!  
                          வீடென்பது வெறும் வசிக்கும் இடமல்ல .வாழும் இடம்.அந்த இடத்தில் நானே நின்று கட்டிய வீடு.நான்  பணி செய்த இடத்துக்கு செல்வதற்கு வசதியாக நடந்து போகும் தூரத்தில் !.
                        அந்த வீட்டில் நடந்தவை  எத்தனையோ   நல்ல நிகழ்வுகள்.நல்ல சந்திப்புக்கள்! மங்களமான குடும்ப நிகழ்வுகள் எல்லாமே இப்போது நினைவுக்கு வருகின்றன.
                  முடிவெடுக்கும்போது என்னமோ அறிவுப் பூர்வமாக எடுத்த மாதிரித்தான் இருந்தது .ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு வந்ததற்குப் பிறகு நினைவுகள் படையெடுக்கத் துவங்கி  விட்டன.
     மகன் படிதததும்,கனிந்த மன தீபங்களாய் என்ற நாவல் போன்ற பல நாவல்களை  உணர்வு பூர்வமாய் எழுதியது.கணவரோடு இலக்கியம் பேசியது.தீவிரத்தோடு சண்டை போட்டது .சமாதானமானது மகனுக்கு திருமணமானது என் மருமகள் காலடி எடுத்து வைத்தது என் பேரன் விளையாடியது எல்லாம் இங்கேதான் .மறக்கமுடியுமா தெரியவில்லை
                   திருமதி மனோ சாமிநாதன் துபையிளிருந்தும்.யசோதா மதுரையிலிருந்தும்  மஞ்சுளா தவராஜ் லண்டனிலிருந்தும் ஆர்வத்தோடு வந்து என்னை சந்தித்ததும் இந்த வீட்டில்தான்!
                       விருப்பப்படி சாமி அறை,புத்தக அலமாரிகள் என்று அமைத்திருந்தோம் .என் தாய்  தொண்ணூறு வயதை எட்டிய போது சின்னதா க ஒருவிழா எடுத்தோம்.
                       என் மன சந்தோஷங்கள்.துக்கங்கள்     பணியிடத்து சாதனைகள்.சிக்கல்கள்  எல்லாவற்றையுமே எனது அறை சுவர்கள் அறியும்,
             நாங்கள் அந்த வீட்டை வேறு வீட்டுக்குப் போன பிறகும் அங்கே
நல்லதே நடந்தது,என் கணவரின் தங்கைதான் அங்கே இருந்தார் .அவரது மகனுக்கும்   திருமணமாகி குழந்தையும் பிறந்தது,
                      அங்கே  எனக்கேற்பட்ட இழப்பு என் கணவரின் மறைவு.என் குடும்பத்தில் ஒவ்வொரு மறைவுக்கும் பிறகு என் வாழ்விலும் ஒருஇட  மாற்றம் நிகழ்கிறது .
                இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னோடு இருந்து  இப்போதும் நல்ல காரணதிற்காக நல்ல கைகளுக்கே போயிருக்கிறது.இனி வேறொரு வடிவத்தில் என்னோடு இருக்கும் என்று நம்புகிறேன்.
விடை கொடுக்கிறேன்.
                 ஒரு உரிமையாளராக இல்லையெனினும் ஒரு நண்பனாக என் நினைவில் இருப்பாய்
  விடை கொடுக்கிறேன் மனம் நிறைந்த நினைவுகளுடன்!  

Saturday, February 16, 2013

வணக்கம் 
இப்போது   மனதை உலுக்கும் செய்தி ஒன்று .
   விவசாயிகள் நிலை.காஸ் பைப் போடுவதற்காக அவர்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை  ஆக்ரமிக்கும் அக்கிரமம்.
.         இங்கே தனிமனித உரிமைகள் மதிக்கபடுவதே இல்லை .ஏற்கனவே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது .கான்க்ரீட் கட்டிடங்கள் விளை  நிலங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன .விவசாயம் செய்கிற கொஞ்ச நஞ்சம்  பே ரையும் 
இவ்வளவு  லட்சணமாக ஊக்குவிக்கிறோம் !
          பொதுவாகவே  நம் தமிழ்நாட்டில் மெத்தனம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது .அதனால்தான் தமிழ்நாட் டுக்காரர்களை எப்படி வேண்டுமானாலும்   ஏய்க்கிறார்கள் .
          விவசாயிகள்         நாங்கள் மூன்று மாற்றுத் திட்டங்களைக் கொடுக்கிறோம் .அரசாங்கம் கண்டுகொள்ளவே  இல்லை என்கிறார்கள் நிலத்தின் மார்க்கெட் மதிப்பில் பத்தில் ஒரு பங்குதான் தரப்படும் என்று சொல்லப் படுகிறதாம்.கருத்துக்கு மதிப்பே கொடுக்காமல் அவர்களை வெளியேற்றப்படுகிறார்கள் என்கிறார்கள்
   .அவர்களின் குரலுக்கும் அரசாங்கம்  மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுவதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்.
        அரசாங்கம் மக்களின் பிரதிநிதி என்று நம்பிக்கொண்டு அறிவுரை சொல்லப்போய் அதற்கப்புறம் அவஸ்தைப் படுவது யாராம்.மனசு கேட்காமல் புலம்பிக் கொள்ளலாம்.
     நானும்  சேர்ந்து புலம்புகிறேன் என்று கொஞ்சம் பேராவது குரல் குடுங்கய்யா..

         
          

Thursday, January 24, 2013

இந்த மண்ணின் சாபக்கேடோ என்னமோ மதிக்கப் பட வேண்டியவர்களை நாம் இனம் கண்டு கொள்வதில்லை .அப்படி இந்த மண்  கொண்டாடி இருக்க வேண்டியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி அய்யா.செய்யத்தவறினோம்.
                    அவருக்கு அஞ்சலி செலுத்துகிற இந்தத் தருணத்தில் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய இல்லையில்லை விடுத்த எச்சரிக்கையை நினைவு படுத்த விரும்புகிறேன்.நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளை விட்டு விட்டு பொழுதுபோக்குகளில் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
அவரது எண்ணங்கள் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள்.
           அவரது ஆன்மா சாந்தியடைய இறை சக்தியை பிரார்த்திக்கிறேன் 
வணக்கம்
        பல நாட்களுக்குப்  பிறகு ப்ளாக்க்கு வருகிறேன் .
    இடைப்பட்ட  காலத்தில்  நிறைய  சொல்ல வேண்டியிருந்தது .ஆனால் வாய்க்கவில்லை. வேறென்ன  சொல்ல?
          சில  விஷயங்கள்  நம்மை அவஸ்தைப் படுத்தும் .உந்தித் தள்ளும்.அப்படி ஒரு  விஷயம் . எம் .எஸ். உதயமூர்த்தி அய்யா அவர்களின் மறைவு.
           அறபுதமான  மனிதர்.எனது கனிந்த மனத் தீபங்களாய் நாவலின் கதாநாயகன்  சிவநாதனின் ஆதர்ஷ நாயகனாக அவரைக் குறிப்பிட்டிருப்பான்.
எனது  பதின்ம என் உள்ளத்தில் பதிந்த அவரது கட்டுரைத் தொகுப்பு எனது வாழ்க்கை முழுதும் பயணித்தது.பயணிக்கிறது
         எனது அந்த நாவலைப் படித்து விட்டு கருத்துக் கொடுத்தார்.அப்படிக் குழந்தையைப்  போல மகிழ்ந்தார். சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் என்று அழைத்தார்.அந்த வாய்ப்பும் கிடைத்தது.நானும் என் மகனும் அந்த  நல்லனுபவம் பெற்றோம்.
          கார்  அனுப்பி  வரவேற்று உபசரித்ததை மறக்கவே முடியாது.ஏதோ விருதுக்கும்  கூட பரிந்துரைத்ததாக சொன்னார்.அது  நிறைவேறாதபோது  என்னைக் காட்டிலும் அவர் வருத்தப்பட்டார்.
            பதவிகள் தேடி வந்த போதும் மறுத்தவர். இன்று  சுயமுன்னேற்றப் புத்தகங்கள்  எழுதுவது  ஒரு லாபகரமான விஷயமாகி விட்டது.ஆனால் அன்றைக்கு உள்மனம் ,வெளிமனம், ஆழ்மனம் பற்றி அவர் போட்ட விதைகள் பல்வேறு வடிவங்களில்  பெருகியுள்ளது .
           குழந்தையைப் போல சுபாவம்.இந்த  இடத்திலேதான் காகத்துக்கு சாப்பாடு வைப்போம். பறவைகளெல்லாம் இங்கே உட்காரும் என்று காட்டி மகிழ்ந்தார்.
            கடற்கரைக்கு வெகு அருகில் வீடு.கடற்கரைக்கு அழைத்துப் போனார்.நான் ஜன்ம சாபல்யம் அடைந்தது போல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்க அவர் எங்கள் வருகையைத் தன் கலப்படமற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி   கௌரவப்படுத்தினார்.
         மிக முக்கிய இழப்பாக உணர்கிறேன் 

Saturday, June 9, 2012

வணக்கம் நண்பர்களே !
      பெங்களுரு தட்பவெப்ப நிலை சுகமாக இருக்கிறது .இயற்கையின் அமர்த்தலானஅழகும் செயற்கையின் ஆர்பாட்டமான அழகும் பார்க்க அருமை .
     மரங்களைப்  பாதுகக்கிறர்கள் .  
           பெரிய தெருக்களின் இருமருங்கிலும்  கண்கொள்ளா காட்சிதான்.
   ஒரு புறம் பெரிய பெரிய மரங்கள்.இன்னொரு புறம்  பெரிய பெரிய கட்டிடங்கள் .       எனக்கு ஏனோ   கோயம்புத்தூர் மேட்டுபாளையம் ரோட்டின் இரு மருங்கிலும் எத்தனையோ ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த ,இன்று இல்லாமல் போய்விட்ட புளிய மரங்களின் நினைவு அனாவசியமாய் வந்தது 

Friday, May 25, 2012

வணக்கம்   நண்பரகளே !
           பல  நாடகளுக்குப் பிறகு  கிக்கானி  பள்ளியில் நடை பெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப  போயிருந்தேன் .
       நான்கு  பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி. கவிங்கர்கள் . அதில் இசைக்கவி ரமணன்  அவர்கள் பாட்டு உள்ளத'தைக  கொள்ளை கொண்டது. பாடுகிற விதத்தில்  ஒரு கம்பீரம் . இனிமை. ஓடக்காரன் பற்றி  ஒரு பாடல் அவ்வளவு அருமை .
        சுகி சிவம்  அவர்களின்  தலைமை  வேறு. கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்?.
      அதைவிட மகிழ்ச்சியான விஷயம் . பார்வையாளர்கள் .மிக உயர்வான ரசனையுள்ள ரசிகர்கள் . நல்ல கூட்டம் .அவர்களோடு அமர்ந்து இரசிப்பது  மிகவும் சுகமாக இருந்தது.
         இந்த  இடத்தில  மரபின் மைந்தன் முத்தையாவை க்  குறிப்பிடாமல் இருக்க முடியாது .
 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை வழங்கி ஒரு பெரிய இரசிகர் கூட்டத்தையே  உருவாக்கியுள்ளார் அவரும் கவிதை வாசித்தார் .  எல்லாருடைய  கவிதைகளுமே  சிறப்பாக  இருந்த அந்த கவி அரங்கம்  ஒரு மறக்கவொண்ணாத   கவிதை  அனுபவம் .